கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

கல்விக்கண் திறந்த காமராசர் தமிழ்க் கட்டுரை KALVI KAN THIRANTHA KAMARASAR TAMIL KATTURAI

 

காமராசர்

முன்னுரை

கல்விக்கண் திறந்த காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் பிறந்தார். இவர் பெற்றோர் குமாரசாமி - சிவகாமி அம்மாள் ஆவர். இவருக்குப் பாட்டி பார்வதி அம்மாள் வைத்த பெயர் காமாட்சி. தாயார் சிவகாமி இவரை ராசா என அழைக்கக் காமராசு என பெயர் நிலைத்தது. இவரின் தங்கை பெயர் நாகம்மாள்.

இளமைக்காலம்               WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

     காமராசர் தன் பள்ளிப் படிப்பைச் சத்திரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப அவர் படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். பள்ளி செல்வதிலும் பாடம் படிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். தந்தையின் மறைவுக்குப் பின் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். தேசத் தலைவர்களின் சொற்பொழிவுகளால்  அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார்.

கல்விப்பணி                     WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

காமராசர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. அவரது இலவச மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. சீருடைத் திட்டத்தால் குழந்தைகள் பலர் பயன்பெற்றனர். 1963 ஆம் ஆண்டு அனைவருக்கும் இலவசக்கல்வித் திட்டத்தை அளித்தார். அறியாமையில் இருண்டு கிடந்த தமிழகத்திற்குக் கல்வி ஒளி ஏற்றியவர் கல்விக்கண் திறந்த காமராசரே.

நிறைவேற்றிய பிற திட்டங்கள்    WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

    காமராசர் ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியத் திட்டத்தை ஏற்படுத்தினார். அவர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் 9 முக்கிய நீர்ப்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அணைகள் பல கட்டப்பட்டன. அவர் காலத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத மிகு மின் நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை போன்றவை தொடங்கப்பட்டன. குந்தா மின் திட்டமும்நெய்வேலி,  ஊட்டி வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவையே. 

முடிவுரை           WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

    பெருந்தலைவர், கர்ம வீரர், காலா காந்தி, அரசர்களை உருவாக்குபவர், ஏழைப்பங்காளர் என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் காமராசர். அவர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளில் இப்பூவுலகை விட்டுப்பிரிந்து நம் நினைவுகளில் நிறைந்தார். விருதுநகரில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக அரசால் மாற்றப்பட்டது. 1976 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது காமராசருக்கு வழங்கப்பட்டது. அவரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.         

காமராசர் புகழ் போற்றுவோம்.  

கல்வியைக் கொண்டாடுவோம்

தமிழ்த்துகள்

Blog Archive