கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

சான்றோர் வளர்த்த தமிழ் - தமிழ்க்கட்டுரை SANDROR VALARTHA TAMIL ESSAY

 

சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை

      முதல் மாந்தன் பேசிய மொழியான தமிழின் தொன்மை ஆய்வுக்குட்பட்டது. உலகின் பல மொழிகளுக்குத் தாய்மொழியாக இருப்பதும் தமிழே. அத்தமிழை வளர்க்க முயன்ற சான்றோர்கள் பலரை வளர்த்தது தமிழ். தமிழால் சான்றோரும் சான்றோரால் தமிழும் வளர்ந்ததை இலக்கிய உலகு நன்கு அறியும்.

வள்ளுவரும் ஔவையும்

      உலகப்பொதுமறை தந்த வள்ளுவர் தமிழை உலகறியச் செய்தார். மூன்றடியில் உலகளந்த இறைவன் போல் ஈரடியில் உலகளந்த புலவன் வள்ளுவரே. பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட குறள் தமிழின் புகழைப் பறைசாற்றும். ஓரடியில் ஆத்திசூடி தந்த ஔவையும் தமிழின் சிறப்பை வரிசைப்படுத்தினார். தமிழ் வளர்க்க ஔவை வேண்டி நெல்லிக்கனி தந்த அதியமானும் தமிழ் வளர்த்தவரே,

இலக்கியத்தில் தமிழ்

      ஐம்பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் இதிகாசங்களும் கண்டவர்கள் தமிழின் இலக்கிய வாழ்வை மேம்படுத்தினர். கம்பன் தந்த உவமையும் சொல்லாடலும் தமிழின் பெருமைக்குச் சான்றுகள். அறநூல்களை அள்ளித்தந்த சான்றோர் அகமும் புறமும் படைத்து தமிழின் தமிழரின் தமிழ்நாட்டின் உயர்வை உலகிற்கு உணர்த்தினர்.

சிற்றிலக்கியத்தில் தமிழ்

      பரணி பாடிய செயங்கொண்டார் போன்றோரும், உலா பாடிய ஒட்டக்கூத்தர் போன்றோரும், குறவஞ்சி பாடிய திரிகூடராசப்பர் போன்றோரும், தூது தந்த புலவர்களும், கலம்பகம் தந்த புலவர்களும், பிள்ளைத்தமிழ் தந்த புலவர்களும், பள்ளு பாடிய புலவர்களும் 96 வகைச் சிற்றிலக்கியங்களை வழங்கிய பலரும் தமிழை வளர்த்தனர்.

பிறநாட்டார்

      வீரமா முனிவர் சதுரகராதி தந்து தமிழால் பெருமை பெற்றார். போப் தமிழின் சிறப்புகளை மொழிபெயர்ப்பின் மூலம் உலகறியச் செய்தார். பிறநாட்டார் பலர் தமிழைப் போற்றி தமிழால் அறியப்பெற்றனர். பிற மொழி பேசுபவர்களும் தமிழை அறிய ஆர்வம் கொண்டனர்.

மொழிப்பற்றாளர்

      அகரமுதலி வெளியிட்ட தேவநேயப் பாவாணரும், பல நூல்களைப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதரும், மொழித்தியாகிகளும், பாரதியார், பாரதிதாசன், சுரதா வழிவந்த பரம்பரைக் கவிஞர்களும் மொழிப்பற்றோடு தமிழை வளர்த்து அழியாப் புகழ் அடைந்தனர்.

முடிவுரை

      அன்று முதல் இன்று வரை தமிழை வளர்க்கச் சான்றோர் பலர் தோன்றியுள்ளனர். தமிழை வளர்க்க எண்ணிய அனைத்துச் சான்றோர்களையும் தமிழ் வளர்த்தது என்பதே மறுக்க இயலா உண்மையாகும். தமிழ் வளர்ப்போம், புகழ் பெறுவோம்.

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive