கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சித் தொகுப்புரை ILAKKIYA MANDRA NIKALCHI THOKUPPURAI

 

இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சித் தொகுப்புரை

திங்களொடும் செம்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்

பொங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ் – என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்கு உரியோர் நம் முன்னோர். இக்கணினிக் காலத்திலும் தமிழ் மொழியின்பால் மாணவர்களைப் பற்றுக் கொள்ள வைக்கும் வகையில் இலக்கிய மன்ற விழா எம் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.                   

03 – 02- 2020 வெள்ளிக்கிழமை அன்று ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  பாரதி இலக்கிய மன்றம் கூடியது. விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக தமிழறிஞர் முனைவர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். இலக்கிய மன்றத்தின் மாணவத்தலைவி பா.இனியா அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தினார். தலைமையாசிரியர் திரு.க.எழிலன் அவர்கள் தலைமையேற்க தமிழாசிரியர்கள் அ.பாண்டியன், பா.அன்பு, செ.நந்தினி ஆகியோர் முன்னிலை வகிக்க மாலை 4.00 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. தமிழாசிரியர் திரு பா.அன்பு அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று தலைமையாசிரியரின் வாழ்த்துரைக்கு வழிவிட்டு அமர்ந்தார்.     

வரவேற்பு நடனம் இரா. தமிழ்மொழி குழுவினரால் அழகுற நிகழ்த்தப்பட்டது. சிறப்பு விருந்தினர் பேராசிரியர் அவர்கள் கன்னித் தமிழ் முதல் கணினித் தமிழ் வரை என்ற தலைப்பில் அவருக்கே உரிய தனிச்சிறப்புடன் உரையாற்றினார். இலக்கியமன்றத் துணைத் தலைவர் செல்வன் க.இளங்குமரன் அன்னாருக்குப் பொன்னாடை அணிவிக்க உதவித் தலைமையாசிரியர் திருமதி ம.கயல்விழி அவர்கள் நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.

செல்வி ம.பாரதி வாசித்த கவிதைக்கு மாணாக்கரின் கரவொலி அலைகடலென முழங்கியது. வீரமங்கை வேலுநாச்சியார் பற்றிய நாடகம் ஏழாம் வகுப்பு சரவணக்குமார் குழுவினரால் வெகுசிறப்பாக நடத்தப்பட்டது. பள்ளியில் நகைச்சுவைத் தென்றல் மணிகண்டன் பல குரலில் பேசி கைதட்டுப் பெற்றான். பட்டிமன்றம் – மாணவர் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொள்பவர்கள் ஆசிரியர்களா ? பெற்றோர்களா ? என்ற தலைப்பில் பதினைந்து நிமிடங்கள் நடத்தப்பட்டது. செல்வன் மு.கார்த்திகேயன் நடுவராக அசத்தினான். சிறப்பு விருந்தினரின் பாராட்டையும் பெற்றான்.                            

செல்வன் ப.முத்துலிங்கத்தின் சிலம்பாட்டமும் அதற்கேற்ற நாட்டுப்புறப்பாடலும் கண்ணுக்கு விருந்து என்றால் மிகையாகாது. செல்வி இ.வளர்மதி பாடிய பாரதியின் நிற்பதுவே நடப்பதுவே பாடல் ஓர் இசைத் தாலாட்டு. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் ஒயிலாட்டம் நிகழ்த்தப்பட்ட போது ஆடாத கால்களும் ஆடின.      

விழாவின் இறுதி நிகழ்வாக நன்றி கூற வந்தார் தமிழாசிரியர் அ.பாண்டியன் அவர்கள். சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்ற பாரதியின் வரிகளைக் கூறி பெருந்திரளாகக் கலந்துகொண்ட மாணவ-மாணவியருக்கும், ஆசிரியப்பெருமக்களுக்கும், அலுவலகப் பணியாளர்களுக்கும், சிறப்பு விருந்தினருக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் தலைமையாசிரியர் சார்பாகவும் பாரதி இலக்கியமன்றத்தின் சார்பாகவும் நன்றி நவின்றார்.                               நாட்டுப்பண் அனைவராலும் சேர்ந்து பாடப்பட்ட நேரம் நிலவுக்கு வழிவிட்டுக் கதிரவன் ஓய்வெடுக்கச் சென்ற அந்திப்பொழுது. ஆம், அன்றைய தென்றலில் தமிழ் மணம் கமழ்ந்தது.

நாள் – 03-02-2021                                                                            தொகுப்புரை வழங்கியவர்

இடம் – ஆவுடையாபுரம்.                                                                      பா.இனியா,

                                                                                                          மாணவத்தலைவி,

                                                                                                       பாரதி இலக்கியமன்றம்,

                                                                                                          ஆவுடையாபுரம்.

 

தமிழ்த்துகள்

Blog Archive