குழந்தைகள் நாள் விழா
முன்னுரை
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற
வாக்கியம் குழந்தைகளின் மேன்மையைக் குறிக்கும். மனிதர்களின் மனக்கவலை நீக்கும்
மாமருந்தாக விளங்கும் குழந்தைகளுக்கென்று ஒரு நாளே குழந்தைகள் நாள். ஒவ்வொரு
நாளும் கொண்டாட வேண்டியவர்கள் குழந்தைகள். குழந்தைகள் நாள் விழா குறித்து
இக்கட்டுரையில் காண்போம்.
நேருவும்
குழந்தைகளும்
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றவர்
நேரு. அவருக்குக் குழந்தைகள் மீது அதிக அன்பு. குழந்தைகளும் அவரை அன்புடன் நேரு மாமா என்று
அழைத்தனர். எனவே அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாள் குழந்தைகள் நாளாகக்
கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள்
நாள் விழா கொண்டாட்டம்
ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் நாளான நவம்பர் 14 அன்று பள்ளிகளில்
இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நேருவின் திருவுருவப்படத்திற்கு மாலை
அணிவிக்கப்படும். அவரின் வாழ்க்கைக் குறிப்பைப் பள்ளிக் குழந்தைகளுக்கு
ஆசிரியர்கள் கூறுவர்.பள்ளிக்குழந்தைகளுக்குப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. மாணவச்செல்வங்களின் திறமைகள்
வெளிக்கொணரப்படுகின்றன. கலைநிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு
இனிப்புகள் வழங்கப்படுகின்றன.
குழந்தைகளைப்
போற்றுவோம்
புத்தகங்களே சமர்த்தாய் இருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றார்
கவிக்கோ அப்துல் ரகுமான். குழந்தைப் பருவத்தின் இன்றியமையாமையை அனைவரும்
அறியச்செய்கிறது இக்கவிதை. குழந்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டும். குழந்தைகளின்
உலகம் தனி உலகம். அதனை அறிந்து குழந்தைகளைப் போற்றுவோம்.
குழந்தைகளும்
விளையாட்டும்
ஓடி விளையாடு பாப்பா என்றார்
மகாகவி பாரதியார். ஆனால் இன்று குழந்தைகள் பலர் செல்பேசி விளையாட்டில்
மூழ்கிக்கிடக்கின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். குழந்தை மைதானத்தில் விளையாடினால் அதன் சட்டை
மண்ணாகும், குழந்தை செல்பேசியில் விளையாடினால் குழந்தையே மண்ணாகும் என்பதை
பெற்றோர் உணர வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு உரிய விளையாட்டுகளை அவர்களுக்கு
அறிமுகம் செய்ய வேண்டும்.
நம்
கடமைகள்
குழந்தைத்
தொழிலாளர்கள் இல்லாத நிலையை இந்தியாவில் உருவாக்குவதே நம் கடமையாகும். ஆதரவற்ற
குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றுவதும் நம் கடமையே. பெண் குழந்தைகளின் பாதுகாப்பை
உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
முடிவுரை
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல்
கேளா தவர் என்கிறது வள்ளுவம். குழந்தைகள் நாளில் மட்டுமல்லாது
ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் குழந்தைகள். இதனை உணர்ந்து பாதுகாப்பான
உலகத்தை உருவாக்கி நம் குழந்தைகள் நலன் காப்போம். எதிர்கால இந்தியத் தூண்களை நேசிப்போம்.
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.