சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்
கண்ணை
விற்று ஓவியமா ? சுற்றுச்சூழலைச் சீர்கெடுத்து முன்னேற்றமா ?
வேடிக்கை மனிதர்களே, விளைவதற்கு மண் வேண்டும். காற்றில் ஈரப்பதம் வேண்டும். புற ஊதாக் கதிர்களை வடிகட்டிய கதிரொளி வேண்டும். வேருக்கு நீர் வேண்டும்.
இவ்வளவும் தந்ததனால்தான் புவி உயிர்க்கோளம். இல்லையேல் இது வெறும் கருங்கற் கோளம்.
மாடி மனைகள், ஆடி கார்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அளவில்லாத் தொழிற்சாலைகள் பொருள் சேர்ப்பதற்குத் தானே ? வாழ்வதற்கு ? காற்றும் நீரும் கடன் வாங்க முடியுமா ? மண்ணை உற்பத்தி செய்யும் மகத்துவம் தெரியுமா ?
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை எனில் விளைச்சல் இன்றி அறம் எப்படிச் சாத்தியமாகும் ? பசிப்பிணி உயிர்குடிக்கும். விலங்கினமும் வீதிக்கு வரும். முழங்குகின்ற மேகக்கூட்டம் இன்றி கதிரொளி கடுமையாக உயிர் கருகும், பயிரும் கருகும்.
சட்டம் போட்டோம், நல்ல திட்டம் போட்டோம், என்றாலும் மனதில் பதிய மறுக்கிறது. ஆம், நமக்கென்று நிகழும் வரை இவ்வுலகில் எல்லாமே வேடிக்கைதானே. உலகச் சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5, 1887 ஆம் ஆண்டே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், அக்டோபர் முதல் வாரம் வன உயிரினப் பாதுகாப்பு வாரம். கொண்டாட்டங்கள் எல்லாம் சரிதான், ஊர் கூடித் தேர் இழுத்தால் தானே உலாவரும் ? ஒரு கை தட்டினால் எப்படி ஓசை வரும் ? மாற்றம் மனதில் வரும் நாளில் மாற்றம் வரும். மாசு நீங்கும், மனிதம் செழிக்கும்.