.
உழந்தும் உழவே தலை
முன்னுரை
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயமே.
ஆம், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறச்செய்வதற்கு விவசாயிகளே வழிவகுக்கிறார்கள். உணவு, உடை,
உறைவிடம் என மூன்றிலும் உணவே முதலிடம் பிடிக்கிறது. ஆதி மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழ
வழிவகுத்தது உழவுத்தொழிலே. நிலங்களின் வகை அறிந்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என வகைப்படுத்தி வாழ்ந்த நம்
முன்னோர் வேளாண்மைத் தொழிலில் வித்தகர்கள். அத்தகைய உழவுத்தொழிலின் சிறப்பை
இக்கட்டுரையில் காண்போம்.
உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம்
அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்,
பருவத்தே பயிர் செய், ஆடிப்பட்டம் தேடி விதை, எள்ளுக்கு ஏழு உழவு, கூழை (புத்திக்குறை) குடியைக்கெடுக்கும் குட்டைக்கலப்பை காட்டைக்கெடுக்கும் ஆகிய பழமொழிகள் நம் தமிழரின் உழவுத்தொழில் அறிவை
எடுத்தியம்பும். உறுமிடத்துதவா உவர்நிலம் என்கிறார் பரணர். செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சந்தாங்கலந்ததுவே என்கிறார் செம்புலப்பெயல் நீரார். இதன் மூலம் மண்ணின் தன்மை அறிந்து பயிரிட்டவர் நம் தமிழர் என்பது தெரிகிறது.
நெல்லுக்கு
நண்டோட
வாழைக்கு வண்டியோட
தென்னைக்குத்
தேரோட – என்பதிலிருந்து பயிர் இடைவெளி குறித்த
நுட்பம் புலப்படுகிறது. ஆட்டுப்புழுக்கை அன்றைக்கே, மாட்டுச்சாணம் மட்கினால்தான்
என்ற பழமொழி தமிழரின் இயற்கை உரம் பற்றிய அறிவைத் தெளிவாக்குகிறது. தைத்திருநாளில்
உழவுத்தொழிலுக்கு உறுதுணை செய்த கதிரவனுக்கு நன்றி கூறி மகிழ்ந்தனர். கால்நடைகளுக்கு
மாட்டுப்பொங்கல் என்று தனியாகவே கொண்டாடினர் தமிழர்.
.
உழவுத்தொழிலுக்கு
வந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை
செய்வோம்-வீணில்
உண்டுகளித்திருப்போரை
நிந்தனை செய்வோம் – என்றார் மகாகவி பாரதி. ஆம், உழவர்கள் தானே
உற்பத்தியாளர்கள். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கால் தடியுங்கூட மிஞ்சாது என்பது
போல பயிர் விளைவிக்கத் தம் உயிர் கொடுப்பவர்கள் உழவர்களே. ஒருநாளும் ஓய்வறியா
உழைப்பிற்குச் சொந்தக்காரர்கள் அவர்கள். உழுகிறபோது
ஊருக்குப் போய்விட்டு அறுக்கிறபோது அரிவாளோடு போனால் உலகம் என்ன நினைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் உழவர்கள்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்
இவ்வுலகம் உயிர்க்கோளமாய்ச் சுற்றிக்
கொண்டிருக்க காற்றும் நீரும் வானும் நிலமும்
நெருப்பும் மட்டும் காரணமல்ல. மாடாய் உழைத்து
ஓடாய்த் தேய்ந்து மகசூல் பெற நாள்தோறும் பாடுபடுகிற உழவனும்தான் காரணம்.
அதனால்தான்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – என்கிறார் தெய்வப்புலவர். இஞ்சி இலாபம் மஞ்சளில்தானே என்று மாற்று வேளாண்மை செய்தவன். களை
பிடுங்காத பயிர் கால் பயிர் என்ற விவரம் அறிந்து காத்தவன் அவன். வலுத்தவனுக்கு
வானம் இளைத்தவனுக்கு எள்ளு என்று இழப்பைத் தாங்கும் திறனைப் பொறுத்து வேளாண்மை
செய்த விற்பன்னர்கள் நம் முன்னோர்.
முடிவுரை
வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது பழமொழி. ஊருணி, குளம், கண்மாய், கிணறு, ஆறு, ஏரி என நீர்நிலைகளைப் பெருக்கி பயிர்வளம் காத்தவர் நம் முன்னோர்.
வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடிஉயரும்
குடிஉயரக் கோன்உயரும் – என்றார் ஔவைப்பாட்டி.
உழவுத்தொழிலைப் போற்றி வளர்க்கும் உழவர்தம் அரும்பணியை நெஞ்சில் பதிப்போம்.
ஏனென்றால் அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை
வைக்கமுடியும்.